CEB | Knowledge Hub

இலங்கையில் மின்சாரத்தின் வரலாறு

இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரமே முதன் முறையாக 1881 ஜுன் 26 ஆம் திகதி மின் வெளிச்சத்தினால் ஒளியூட்டப்பட்டது. இலங்கை இங்கிலாந்தின் காலனித்துவ நாடாக இருந்த காலப் பகுதியில் அதாவது 1882 ல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்த  SS Helios என்ற கப்பலில் மின் விளக்கு எரிவதை இலங்கை மக்கள் பார்த்துள்ளனர். கொழும்பு கோட்டை பிரிஸ்டல் ஹோட்டலின் பிலியட் அறையில் 1890 ஆம் ஆண்டு முதன் முறையாக மின் குமிழ் ஒளிர்வூட்டப்பட்டது. இது டீசல் மின்பிறப்பாக்கி ஒன்றின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பிரித்தானியர்களுக்குச் சொந்தமான நாடு முழுவதிலும் அவர்களினால் பராமரிக்கப்பட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் மின்சாரம் பாவிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

1895 ஆம் ஆண்டில் M/S Boustead சகோதரர்களினால் முதன் முறையாகக் கொழும்பில் பொதுமக்களுக்கான மின்சார விநியோகம் வழங்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்த காலப் பகுதியில் கொழும்பு இலெக்ரிக் ட்ராம் வேய்ஸ் மற்றும் லைட்டிங் கம்பெனி மற்றும் கண்டி லைட்டிங் கம்பெனி என்பன அவர்களது மின்சாரத் தேவையினை தங்கள் பகுதிகளில் பெற்றுக் கொண்டுள்ளனர். 1918 ஆம் ஆண்டில் பொறியியலாளர் டி. ஜே. விமலசுரேந்திர அவர்கள்  ஆராய்ச்சிகள் மூலம் இலங்கையின் மத்திய மலைப் பகுதிகளில் நீர் மின்னுற்பத்திக்கான சாத்தியங்கள் இருப்பதனை இனம் கண்டு கொண்டார். இவர் இலங்கை மின்சாரத்தின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.

பொது வேலைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளரின் தலைமையின் கீழ் 1926 ஆம் ஆண்டில் தனியானதொரு மின்சாரத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது.  மேலும் அதிகரித்து வந்த மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யுமுகமாக 1928 இல் அனல் மின் நிலையம் ஒன்றினை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததுடன் சேர் ஹாபட் ஸ்ரான்லி எனவும் அதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

1935 ஆம் ஆண்டில் இரண்டு வகை அறவீட்டு முறைமைகள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், அதே ஆண்டில் 1935 ஆம் வருட 35 ஆம் இலக்க மின்சார சபைச் சட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபையும் நிறுவப்பட்டது. இருப்பினும் 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயற்படத் தொடங்கிய சபையானது 1937 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. அதன் பொறுப்புக்கள், செயற்பாடுகள், கடமைகள் என்பன அரசாங்க மின் திணைக்களத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

1950 ஆம் ஆண்டில் லக்ஸபானா மின் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் எண்ணற்ற பல மின்சாரத் திட்டங்கள் இதன்பின் தொடரப்பட்டது.


1969 நவம்பர் 01 ஆம் திகதி 1969 ஆம் வருட 17 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபை உருவாக்கப்பட்டது.

பொறியியலாளர் டி. ஜே. விமலசுரேந்திர

பொறியியலாளர் டி. ஜே. விமலசுரேந்திர இலங்கை நீர் மின்சாரத்தின் தந்தையாவார்.

1874 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 17 ஆம் திகதி டி. ஜே. விமலசுரேந்திர பிறந்தார். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்ற அவர் அனைத்து பாடங்களிலும் அறிவுத்திறமைக்காக விருதுகள் பெற்றார். பாடசாலைக் காலத்தில் லண்டன் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையில் சித்தி பெற்று கௌரவமிக்க மாணவர் ஒருவராகத் திகழ்ந்தார் அன்னாருக்கு டி. பி. ஜயதிலக விருதும் வழங்கப்பட்டது.

பயிலுநர் பொறியியலாளராக அரசாங்க தொழிற்சாலையில் இணைந்து கொண்ட இவர் கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரியின் பொறியியல் பிரிவில் இணைந்து சிவில் பொறியியல் துறையில் முதல் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.  அத்துறையில் முதல் பட்டம் பெற்ற இலங்கைப் பொறியியலாளர் இவராவார். இந்தியாவில் உயர் கல்வியை மேற்கொண்டதன் பின்னர் டி. ஜே. விமலசுரேந்திர அவர்கள் பொது வேலைகள் திணைக்களத்தில் சிரேஷ்ட பொறியியலாளர் ஒருவராக நியமனம் பெற்றார். மாவட்டப் பொறியியலாளர் என்ற வகையில் தியத்தலாவை, காலி, உடபுஸல்லாவை மற்றும் கண்டிப் பிரதேசங்களுக்குப் பாராட்டத்தக்க விதமாகச் சேவைகள் புரிந்தார். அதன் பின்னர் பொது வேலைகள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்ட இவர்,  பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கொலன்னாவை மின் விநியோக முறைமையை வடிவமைத்தார்.

டி. ஜே. விமலசுரேந்திர அபர்டீன் லக்ஸபானா நீர் மின் திட்டத்தினை திட்டமிட்டார். எனினும் அவரின் கனவு நிறைவு செய்வதற்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் தடையாக இருந்தனர். 1931 ஆம் ஆண்டில் மாநில சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று டி. ஜே. விமலசுரேந்திர, லக்ஸபானா நீர் மின் திட்டம் செயற்படுத்தப்படுவதற்கு வழி அமைத்தார். அதன் பிரதி பலனாக 1950 ல்  இலங்கையின் முதலாவது நீர் மின்னுற்பத்தி நிலையமான “லக்ஸபான நீர் மின்னுற்பத்தி நிலையம்” 25 MW கொள்ளளவுடன் ஆரம்பிக்கப்பட்டது. ரூவன்வெலிசாய புனரமைப்பின் போது விமலசுரேந்திர அவர்கள் தாது கோபுரத்தின் மேல் பகுதியினை “கொத் கெரல்ல” வடிவமைத்தார். மேற்கத்தியர்களை பௌத்த தத்துவங்களுக்கு வசீகரிக்கும் விதமாக அவர் பல பௌத்த நூல்களை ஜேர்மன் மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார். தனது தாய் நாட்டிற்கும், இனத்திற்கும், மதத்திற்கும் பெரிதும் போற்றத்தக்க சேவை செய்த டி. ஜே. விமலசுரேந்திர அவர்கள் 1953 ஆகஸ்ட் 10 ஆம் திகதி காலமானார். அவரின்  ஒப்பற்ற சேவையினைப் பாராட்டும் விதமாக நோட்டன் பிரிட்ஜ் நீர் மின் நிலையம் டி. ஜே. விமலசுரேந்திர நீர் மின் நிலையம் என பெயர் சூட்டப்பட்டது.

லக்விஜய மின்னுற்பத்தி நிலைய விபரங்கள் படம். லக்விஜய மின்னுற்பத்தி நிலைய முகப்புத் தோற்றம்.

லக்விஜய மின்னுற்பத்தி நிலையம் பனையடிக் கிராமத்திற்கு அருகில் அமைந்து காணப்படுகின்றது. லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்திற்கு அண்மையாகவுள்ள புத்தளம் நகரமானது மின் நிலையத்திலிருந்து அண்ணளவாக 12 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையின் முதலாவது நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் இதுவாகும். இது அடிப்படை மின்னுற்பத்தி நிலையமாக செயற்படுத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையத்தின் நிறுவப்பட்ட கொள்ளளவு ( இதன் பின்னர் LVPP எனக் குறிப்பிடப்படும் ) 900 MW களாகும். இம்மின்னுற்பத்தி நிலையமானது தேசிய மின் தொகுதியுடன் மின்னுற்பத்தி நிலைய வளி காப்பிடப்பட்ட உபமின் நிலையத்திலிருந்து (GIS) இணைக்கப்பட்டுள்ளது. இது இருசுற்றுகள் கொண்ட 220 kV அழுத்தவேறுபாடுடைய மின்பரிமாற்றல் இணைமார்க்கம் ஊடாக புதிய சிலாபம் மற்றும் புதிய அனுராதபுரம் உபமின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையத்தின் வரலாறு

1998 ஆம் ஆண்டில் ஆரம்ப சாத்தியக் கூற்றுக் கற்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பிரதேசமானது ரோமன் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் உள்ளடக்கி பலமதக்கலாச்சாரத்தினைக் கொண்டுள்ளது. இப்பிரதேச மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் மீன் பிடித்தலாகும். மின்னுற்பத்தி நிலையத்தின் 1 ஆம் கட்ட நிர்மாண வேலைகள் 2006 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் அலகு 1 அதன் வாணிபச் செயற்பாட்டினை ஆரம்பித்தது. 2014 ஆம் ஆண்டில் மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டம் 2 நிறைவு செய்யப்பட்டது. முறையே ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் அலகு 2 மற்றும் அலகு 3 அவற்றின் வாணிபச் செயற்பாடுகளை ஆரம்பித்தது.

மின்னுற்பத்திச் சுருக்கம் (LVPP) – தேசிய மின் தொகுதிக்கு வழங்கப்பட்ட தேறிய சக்தி (GWh)

வருடம்

அலகு 01     

அலகு 02     

அலகு 03     

மொத்தம்

2011

922.31

 

 

922.31

2012

1403.74

 

 

1403.74

2013

1469.37

 

 

1469.37

2014

1508.19

1224.93

469.05

3202.17

2015

917.97

1745.98

1793.33

4457.28

2016

729.99

2158.52

2158.08

5046.60

2017

1551.09

1864.45

1687.72

5103.26

இலங்கையின் முதலாவது நிலக்கரி மின் நிலையம் என்ற காரணத்தினால் இத்திட்டம் நாட்டின் கவனத்தை மிகவும் ஈர்த்தது. நிலக்கரி மின்னுற்பத்தி ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்பட்டாலும் இலங்கை ஊடகங்களுக்கும் அரசியல் தரப்பினர்களுக்கும் இது புதியதொரு தலைப்பாகக் காணப்பட்டது. நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள் குறித்து தவறான செய்திகள் பரவியதன் காரணமாக இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.

இவ்வாறான சம்பவங்களால் இதன் நிர்மாணப் பணிகள் தாமதமாகி, நிலக்கரி மின்னுற்பத்தி செலவினை விடவும் கூடிய விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தினைப் பெற வேண்டி ஏற்பட்டதனால் இலங்கைக்கு பில்லியன்கள் அளவில்

இழப்புக்கள் ஏற்பட்டன.

2.0 மின்னுற்பத்தி நிலையத்தின் அறிமுகம்

லக்விஜய மின்னுற்பத்தி நிலையமானது ‘bituminous coal’  இனை முக்கிய எரிபொருளாக பயன்படுத்துகின்றது. கறுப்பு நிலக்கரி அல்லது  ‘bituminous coal’  மிருதுவான நிலக்கரி என்பதுடன் ‘bitumen’  எனும் தார்  போன்ற ஒன்றினை கொண்டுள்ளது. இது பழுப்பு நிலக்கரியிலும் (lignite coal) உயர் தரம் கொண்டதெனினும்  anthraciten  இனை விடவும் தரம் குறைந்ததாகும். பொதுவாக இந்நிலக்கரியானது lignite மீது உயர் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. அதன் நிறம் கறுப்பு அல்லது கடும் மண்ணிறமாக இருக்கலாம்.

bituminous நிலக்கரியில் 77-87 வீதம் காபன் காணப்படும் அதே நேரம்  anthracite    நிலக்கரியில் 87 வீதத்திற்கும் அதிகமான காபன் காணப்படுகின்றது. இருப்பினும் anthraciten    நிலக்கரியினை விடவும் bituminous நிலக்கரி ஏராளமாகக் காணப்படுகின்றது.

படம் : - நிலக்கரி உருவாக்கப்படும் கட்டங்கள்

நிதி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட பெறுகை நடை முறைமைகளுக்கு அமைவாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் Bituminous நிலக்கரி கொள்வனவு செய்யப்படுகின்றது. பொதுவாக இந்தோனேசியா, ரஷ்யா அல்லது தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்தே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றது.

நிலக்கரியானது கொதிகலன் ஒன்றில் எரிக்கப்பட்டு வெப்பசக்தி உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் சூளையினைச் சுற்றியுள்ள நீர் குழாயிலிருந்து 538 oC  மற்றும் 16.7 MPa  உடைய நீராவி ஏற்படுத்தப்படுகின்றது. நீராவியிலுள்ள சக்தி மூலம் விசையாழி (turbine) யின் சுழலி 3000 rpm என்ற வேகத்தில் சுழல்கின்றது. விசையாழியுடன் இணைக்கப்பட்டுள்ள 20 kV மின்பிறப்பாக்கி 300 MW மின்சக்தியினை உற்பத்தி செய்கின்றது. இம்மின்சக்தியானது 220 kV அழுத்தவேறுபாடுடைய இரண்டு இணைமார்க்கம் ஊடாக தேசிய மின் தொகுதிக்கு பரிமாற்றல் செய்யப்படுகிறது.

படம். நீராவிச் சுற்று

படம் : விசையாழி (turbine) மற்றும் மின் பிறப்பாக்கி உபகரணங்கள்

படம் : இறங்கு துறை